#சங்க_காலப்_பயணம 33
#சங்கப்புலவர்கள்
புன்செய் நிலத்தில் அழகான சிறு இலைகளை நெருக்கமாக கொண்ட நெருஞ்சி செடியில் கண்களுக்கு இனிமையாக பூக்கும் அழகிய நெருஞ்சிப் பூக்கள்தான் பின்னாளில் கொடிய முள்ளாக மாறுகிறது. அதுபோல எனக்கு இனியவைகளை செய்த அதே தலைவன்தான் இப்பொழுது நெருஞ்சு முள்ளைப்போல் மாறி என் நெஞ்சு வருந்தும்படி இன்னாதவகைகளை செய்துவருகிறான்....
என் நெஞசம் வருந்துகிறது!!
*****************************************
நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
புன் புலம் அமன்ற சிறி இலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முள் பயந்தாங்கு,
இனிய செய்த நம் காதலர்,
இன்னா செய்தல், நோம் என் நெஞ்சே.
-அள்ளூர் நன்முல்லையார்,
*****************************************
குறுந்தொகை 202,
திணை: மருதத் திணை,
துறை: தலைவி தோழியிடம் சொன்னது
இந்த பாடலை இயற்றிய புலவர் பெயர் "அள்ளூர் நன்முல்லையார்". இது ஒரு பெண்பாற் புலவர்.குறுந்தொகையில் மட்டும் மொத்தம் ஒன்பது (32,67,68,93,96,140,157,202,237) பாடல்களைப் பாடியுள்ளார். அகநானூற்றில் ஒரு பாடலும் (46), புறநானூற்றில் ஒரு பாடலும்(306) மொத்தம் பதினொன்று பாடல்களை பாடியுள்ளார்....
கூடுதல் தகவல்: நெருஞ்சு பூக்கள் சூரியகாந்தி பூக்களைப்போல சூரியனை பார்த்தபடியே எப்பொழுதும் இருக்கும் அதன் இயக்கத்திற்கு தகுந்தபடி தானும் தலையை நகர்த்தி சூரியனை பார்த்துக்கொண்டே இருக்குமாம்...
நெருஞ்சி மலரை சங்கப்பாடல்கள் பலவற்றில் கதிரவனின் காதலனாக வர்ணிக்கிறது.
*****************************************
ஞாயிறு அனையன் தோழி,
நெருஞ்சி அனைய, என் பெரும் பணைத்தோளே.
-குறுந்தொகை 315
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
-அகநானூறு 336
நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாஅங்கு
-புறநானூறு 155
*****************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக