வெள்ளி, 18 டிசம்பர், 2020

கருவறை நீச்சல் கவிதை நூல்

 


          



           சமர்ப்பணம் 

                      

              அன்பு உறவுகளுக்கு….







பதிப்புரிமை ©2020 க மகேஸ்வரன்  



அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .

இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் 

வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ

அனுமதி  இன்றி மறு உருவாக்கம் செய்யவோ, 

மீட்டெடுக்கும் முயற்சியில் சேமிக்கவோ ,

 மறுவடிவாக்கம்  அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாகவோ  பயன்படுத்தக் கூடாது.




@



அப்பா  


உன் நகலாய் 

எனை ஈன்று 

உலகிற்கு தந்தாயே  !


உன் சுமைகள் 

தாராமல் 

உச்சத்தில் வைத்தாயே ! 


சிறு துரும்பும் 

அண்டாமல் 

வலையாக காத்தாயே  !


என்ன செய்து 

நான் தீர்ப்பேன் 

மதிப்பில்லா உன் கடனை  !


காற்று மழை 

வெயிலிலும் 

நீ பட்ட துயர் எத்தனையோ !


கலங்காத உள்ளம் 

மட்டும் 

காட்டி இங்கு நீயிருப்பாய் !


சோறு தண்ணீர் 

இல்லாம

உழைத்த உழைப்பு எத்தனையோ !


சோர்ந்து நீயும் 

போகவில்லை 

எப்போதும் எமைக்காக்க !



காரு பஸ்சு 

வேகம் என்ன 

உன் சைக்கிள் முன்னால !


கடவுள் தரும் 

அருளென்ன 

உன் சிரிப்பு முன்னால  ! 


எமை நினைத்த 

வாழ்க்கையில் நீ 

உமை நினைக்க மறந்தாயே !


உனதாசை எல்லாம் 

துறந்ததுல 

புத்தனையே வென்றாயே  ! 


 உலகத்தில் 

உனைப்போல 

ஒரு உறவும் இருந்ததில்லை  !


உயிர் உள்ள 

காலம் வரை 

எமக்காகவே உன் கவலை !


தெய்வமேதும் 

தேவையில்லை 

வாழும் தெய்வம் நீயிருக்க.!!





பனியாய் பனியாய் விலகாதோ 


பிணியே பிணியே  நீ தந்தாய்

பனியாய் பனியாய் விலகாதோ 

இனியும்  இனியும் உனையே தான் 

நினைக்கும் நினைக்கும் மனமே தான்.!  



பிணியே பிணியே நீ தந்தாய் 

பனியாய் பனியாய் விலகாதோ. .

இனியும்  இனியும் உனையே தான் 

நினைக்கும் நினைக்கும் மனமே தான். !


கனவாய் என்னுள் நீ வந்தாய் 

கடவுள் போலே ஆனாயே 

கனவும் இன்று நிறைவாகும் 

கண்ணே நீயும் துணை சேர்ந்தால்  !



 காற்றில் மிதக்கும் இலைபோல 

தூரம் தூரம் போகாதே 

வேரைத் தழுவும் பூவாக 

என்னுடன்  நீயும்  சேர்வாயே !


உன்னுடன் வாழ்ந்திட துடிக்கின்றேன் 

 மண்ணைச் சேரும் மழையாக 

என்னுள் கனலை மூட்டாதே 

 ஏழையின் வறுமை நோயாக. !  


பிணியே பிணியே  நீ தந்தாய்

பனியாய் பனியாய் விலகாதோ 

இனியும்  இனியும் உனையே தான் 

நினைக்கும் நினைக்கும் மனமே தான். !




செடிகள் பூக்க மறந்தாலும் 

வண்ணத்து பூச்சிகள் வெறுக்காதே 

நினைவுகள் சுமந்தே வந்திடுமே 

அன்பை என்றும் மறவாதே. . !


காற்றில் கலந்திடும்  பூவாசம் 

காற்றை என்றும் வதைக்காது . .

காதல் கலந்த நமைப்போல 

காதல் ஒன்றும் கிடையாது.. !


 பிணியே பிணியே  நீ தந்தாய்

பனியாய் பனியாய் விலகாதோ 

இனியும்  இனியும் உனையே தான் 

நினைக்கும் நினைக்கும் மனமே தான். !!



உயிராய் நீயும் சுமப்பாயே.!

 

ரதியாக நீ பதியாக நான் 

விதி செய்வோம் வா. .!

 

நானாய் நானாய் நான் வந்து 

உன்னில் உன்னில் கலந்திடுவேன் 

உன்னை உன்னை நீ தந்து 

என்னில் என்னில்  கலந்திடுவாய்.!

 

நம்மில் நம்மில் நாம் கலந்து 

நம்மை நம்மை நாம் தொலைத்து 

நம்மைத் தேடும் தேடலிலே 

சொர்க்கம் காண்போம் வா வா வா.!

 

காதல் கொண்ட கண்மணியே 

காமம் சிந்தும் கருவிழியே  

மோகம் தீர்க்க நீ வா. வா . . 

முத்தம் தந்தே  இனித்திடவா. .! 

 

நித்தம் நித்தம் உன்னோடு 

முத்தம் மொத்தம் கலந்திடுவேன் 

யுத்தம் ஒன்று நடக்காமல் 

வெற்றியும்  தோல்வியும்  தெரியாது. .!

 

காம யுத்தம் நடத்திவிட்டு 

வெற்றியை இருவரும் பகிர்வோம் வா! 

முத்த சண்டை செய்வோம் வா

முழுதும் அதிலே கரைவோம் வா. .!

 

புதையல் தேடும் வித்தையிலே 

புதைந்தே போகிறேன் உனக்குள்ளே 

புதையும் என்னை உனக்குள்ளே 

உயிராய் நீயும் சுமப்பாயே. .! 

 

வண்ண வண்ணக் கோலம் 


வண்ண வண்ணக் கோலம் 

வரைந்து வைத்த மயிலே 


கண்ணில் படும் அழகை 

கொட்டி வைத்த குயிலே 


மின்னல் போல பார்வை 

மீனைப் போலத் துள்ளல்


சன்னல் ஓரக் காற்றாய் 

என்னை வருடும் பூவே 


வாசம் ஒட்டிக் கொண்ட 

வண்ணப் பூவைப் போலே 


கலந்தே விட்டோம்  நாமும் 

காலம் மொத்தம் ஒன்றாய் 

வா.  . 

வானும் நிலவுமாய்  வாழ்வோம் . .





தேவதையே.! 


காந்தம் கொண்டெனை 

ஈர்க்கும் விழியாள் !

சாந்தம் கொண்டால் 

சரண் புகுவேன்!!


இரும்பை கரும்பாய் 

மாற்றும் உன்னை  

வேறென்ன  சொல்ல!! 

தேவதை என்பதைத் தவிர!!!!!


 மழை இறங்கும் மாலை 


காற்றின் திசை அறியா 

தென்னைமரம் நெளிய..


காகம் குருவியெல்லாமே 

இடம் தேடி அலைய ..


வேகம் எடுத்து 

சில நாய்கள் 

இருட்டில்  ஓடித்தொலைய ..


தாகம் தீர்ந்த 

நிலத்தின் வெடிப்பு 

மெல்ல மெல்ல மறைய ..


இரைதேடி திரிந்த பாம்பு 

புற்று தேடி விரைய ..


ஈசல் கூட்டம் அடுக்கடுக்காய் 

மேலே வரத் துணிய..


வாசல் எங்கும் 

வண்ணக் கோலம்

மழைத்துளிகள் வரைய ..


ஏழை உள்ளம் 

சன்னல் வழி 

மழை பார்த்து  நனைய.. 



ஏற்றம் தரும் 

வாழ்வை எண்ணி 

பயிர்கள் தவமும் கலைய..


மாற்றம் வரும்  

காலம் கருதி 

பூமித்தாயும் சிரிக்கவே!!!!

           








தவளை 


கிணற்றுக்குள் விழுந்த தவளை 


மிதந்து கொண்டிருந்தது


 தற்கொலை செய்துகொண்ட பிணம்.. 




நீதி


நீதி கேட்டபடியே 

வந்தமர்ந்தது..! 

கறிக்கடைக்காரன் 

எடைத்தட்டில்  

புறா....!






 அம்மா எழுந்திராய் !


துடிதுடித்து தாய் இறந்தால் 

துடிக்காதோ பிள்ளை நெஞ்சம் 

துன்பம் வந்த காரணத்தை 

வதைக்காதோ வீர உள்ளம் 

தாய் தந்த அன்பை

தான் கொண்ட அன்பை 

தடையொன்று போட்டு  

விதி செய்த சதியால்   

பிள்ளை இன்று பேதையானான் 

பிஞ்சு மனம் பித்தாய் போனான் 


வள்ளுவரே ! 

வாய்ச்சொல் பலி க்கும் வல்லவரே!

தூங்குவது போலும் சாக்காடு என்றீரே. !

சொன்ன வார்த்தை சரியே  

 ஏழைப்புதல்வனின் எழுப்புதல் 

நிலையறியா  முயற்சி காணீர்.  

அம்மா எழுந்திரு!  அம்மா எழுந்திரு !  

அன்பாலே  எழுப்புகிறான் . .!

மகனின் பாசத்தை மரணம் அறியுமா ?

மதியற்ற எமனும் மனம் இரங்குவானா ???


யார் எழுப்புவார் ?

அந்த இறந்து போன அம்மாவின் 

தூக்கத்தை கலைத்து!!!!

என்ன சொல்லி புரியவைக்க முடியும் 

தூங்கிப்போனவளின் சாக்காடு இது என்பதை???? 







எனதழகே 


மழையில் குளித்த நிலவொன்று 

கண்முன் வந்தது அழகாக


மன்மதன் கோயில் சிலையொன்று 

எதிரே வந்தது ரதியாக 


கார்குழல் விரித்த மயிலாக 

கவரும் அழகுத் தாரகையே 


மயக்கும் பார்வை விழியாளே 

மயங்கும் எதுவும் உன்அழகாலே


பாடும் குயிலே நீயும் தான் 

பச்சை வண்ண புடவை கட்டி 


தங்கச்சரிகை போட்ட படி 

தவழும் அன்ன நடையழகே


வண்டைக்கவரும் வாசத்தால் 

வளம் குறையா பூ நீயே 


உண்டு களித்திடும் தேன் சுமந்த 

இன்பம் குறையா தாமரையே 


தேனைச் சொட்டும் இதழ்களையே

சுவைக்க தெரியா வண்டுகளே


இருக்கும் ஊரின் நீ இருந்து 

வருவது என்ன புறப்படுவாய் 





தேவலோகம் விலகி வந்த 

தேவதை உந்தன்  புகழ் அறியாத 


மானிடக் கூட்டம் வாழுமிடம் 

மங்கை உனக்கு ஏற்றதுவோ. 


இந்திரலோகம் உனை அழைக்க 

இருந்திடல் இங்கு முறை தானோ. . 


பிரமம் செய்த பேரழகே 

பிரபஞ்ச ராணி நீ தானே.  . 


பார்வை கொண்டு சாய்த்திடுவாய் 

பாவை நீயும் எனதழகே.  .. 







உள்ளம் தெளிவுற 



உள்ளம் தெளிவுற 

என்ன வழி!! 

உன்னை தருவாய் 

இறைவன் வழி!! 

எண்ணம் தெளிவுற 

என்ன வழி!! 

எதுவும் சம்மதம் 

அதுவே வழி!! 





நெருப்பு 



 சீதையை சுட்ட காரணத்தால்


சிறை வாசம் 


தீப்பெட்டிக்குள்  நெருப்பு !





கண்மணியே கண்ணுறங்காய் 


கருவுக்குள் உருபெற்று 

கால்பதித்த நாள் முதலே 

காத்திருந்தேன் காத்திருந்தேன் 

கண்மணியே உனக்காக. .!


எனக்குள்ளே நீ துளிர்த்த 

நல்ல செய்தி சொன்ன ஆச்சி 

மணிக்கட்டு நரம்பமுக்கி

மகிழ்ச்சியோடு சொன்னாளே  ..!  


அதுமுதலே  நான் உன்னை 

பொத்தி பொத்தி வளர்த்தேனே 

ஆகாரம் கூட உன்னை

நினைத்தே தான் தின்னேனே ..!


சாப்பிட்ட உணவு எல்லாம்

ஒவ்வாமல் ஓடி வர

வாந்தியும் தான்  வந்த போதும் 

சளைக்காமல் நான் தின்னேன் !


மாசக் கணக்கை எல்லாம் 

மனசோடு எண்ணி வந்தேன் 

கொண்ட ஆசை அத்தனையும்  

கோடியுண்டு  நெஞ்சுக்குள்ள. !


மசக்கையில பட்ட பாடு 

பின் வாசல் கதவறியும் 

மல்லாந்து  படுத்த பாடு 

கயித்து கட்டில் தானறியும் !




வாந்தியில வயிறு வலிச்சா

உனக்கு நோகும் என்பதால

அடக்கி அடக்கி தோற்றுப் போனேன் 

அடி வாசல் தாண்டுமுன்னே !


வயிற்றுக்குள்ள உன்னை வச்சி 

வலிக்காமல் நான் நடந்தேன் 

அதிர்வில்லா வேலை மட்டும் 

அளவோடு செய்து வந்தேன்!


நாத்து நடப் போகவில்லை  

களை புடுங்க  இறங்கவில்லை 

கருவளரும் பிள்ளை  உனக்கு 

வலி கொடுக்க மனசுமில்லை !


எட்டு மாசம் தாண்டியாச்சி 

வயிறு மொத்தம் சரிந்துபோச்சி

கொட்டும் மேள சத்தத்தோடு 

சாதி சனம் கூடியாச்சி !


கண்ணாடி வளவி போட்டு 

கலர்கலரா சோறும் போட்டு 

சந்தனத்தில் நலங்கு வச்சி 

சாதி சனம் வாழ்த்தியாச்சி  !


 அடிமேல அடிவச்சி  

ஆடிநானும் நடந்து வர 

ஆத்தா உன் புள்ளைக்கு 

நல்ல செய்தி சொல்லிடம்மா  !



பெரியவங்க சொன்ன படி 

கதை கதையா சொன்னதெல்லாம் 

 பின்னால உதவும்  என்று 

பிசகாம கேட்டு வைத்தாய் !


பத்தாம் மாதம்  தொடங்கயிலே 

பத்திரமாய் நான் இருக்க 

குதித்து வர காத்திருக்கும் 

உன் நெனப்பில் பூத்திருக்க.!


உலகத்து சாமிக்கெல்லாம் 

வேண்டுதல்கள் கோடி ஆச்சி 

உனை பார்க்கும் ஆவல் கொண்டே

துடிக்குதிங்கே என் மூச்சி !


அடிவயிறு வலியெடுக்கும்

அடையாளம் தெரியலயே  

அப்படியும் இப்படியும் மக்கள் 

சொன்ன கதை புரியலயே  ! 


எப்படியும் பிள்ளை உன்னை 

நான் தானே பெறவேண்டும் 

துணிவு மொத்தம் கொண்டவளாய் 

காத்திருந்தேன் பெற்றெடுக்க.!


சொன்ன தேதி வந்தபோது 

சொர சொரனு மனசுக்குள்ள 

 பயம் ஒன்று பற்றிக்கொள்ள

பதறிப் போய்தான் நின்றேனே.! 



குழப்பிக்கொண்டே கிடந்தேன் நான் 

காலை மாலை இரவு என 

எப்போது வலி வருமோ 

திக்கத்து போனேன் நான் ! 


மெதுமெதுவாய் பகல்  ஓட 

அந்தி சாயும்  மாலையில

வேலை எல்லாம் முடிஞ்ச பின்னே

சாஞ்சி கிடந்தேனே தூங்காம.! 

அப்பப்போ  வரும் போல 

அடி வயிற்றில் சிறுவலியும் 

அந்த நேரம் கூடிடுச்சி 

வலியும் ரொம்ப அதிகமாச்சி  ! 


பஸ் புடிக்க  நின்னேனே

ஆஸ்பத்திரி போக வேண்டி

தட்டுத் தடுமாறி  நான்

போய் சேர்ந்தேன் ஆஸ்பத்திரி.!


 அவசரமாய் புடவை மாத்தி  

அணியெல்லாம் கழற்றிவிட்டு 

நான் மட்டும் போனேனே 

உனை சுமந்த வயித்தோட.! 


உனக்கு முன்னால 

எத்தனையோ பேர் பிறக்க 

கருவுக்குள் துடித்திருக்க 

வெளியே வர காத்திருக்க.!



நானும் அந்த ஆவலோடு 

நடையெங்கும் நடந்தேனே 

நர்சம்மா சொன்ன வாக்கு 

நடந்திடவே நான் விரும்பி! 


நடநடயா  நான் நடந்தே

குதிகாலும் நொந்துபோக

அடி வயிற்றில் நீ உதைத்த 

அதிவேக உதை ஒன்னு  ! 


தண்ணீர் குடம் உடைந்து  

தரையிறங்கி சொட்டயில 

ஓடி நான்  போய் சொன்னேன் 

ஊசிபோடும் நர்ஸ்கிட்ட . .!


விறு விறுனு கூட்டிப்போயி  

படுக்கயில கிடத்திப்புட்டு 

வந்த வேலை முடிந்தது போல் 

வாய் பேசாம போச்சிதந்தம்மா  ! 


சில்வர் தகட்டு மேல 

நெளியும் பனி கட்டி போல 

நடுங்கி நான் நெளிந்தேனே 

நள்ளிரவு கடந்தபோதும்   ! 


வலி ஏதும் எடுக்காம 

வரும் பாடும் இல்லாம 

விழிபிதுங்கி காத்திருந்தேன் 

கண்மணியே உன் வரவை   ! 



உடம்பில் ஊரிவரும் 

உள்மூச்சி வலியொன்னு 

மேல்மூச்சும் கீழ்மூச்சும் 

இன்னும் குறையவில்லை   ! 


இயல்பாய் இழுத்த மூச்சை 

இருமடங்கா உந்தி தள்ள

இன்னு இன்னு வேகமுன்னு 

சொன்ன சொல்லு மாறலயே!!


உயிரை நான் பிடிச்சி 

உன்ன வெளியேத்த 

நாடி நரம்பு எல்லாம் 

வலிமையத்து போனதுவே  ! 


நீ தான் செய்ய வேணும் 

பிள்ளைய பெக்க வேணும்

முக்குடியம்மா முக்குனு 

மூத்த நர்ஸ்சு சொல்லிப்போச்சி  ! 


இன்னும் இன்னும் போராடி 

மொத்த உயிர் நான் திரட்டி 

உன்னை வெளியேற்ற 

எடுத்த முயற்றி தோற்கவில்லை  ! 


கருவறையை தாண்டி நீயும் 

கவனமாக வெளியில் வர 

தலைவந்த செய்தி சொல்லி 

கத்தியால் கீறல் போட. ! 



சத்தம் மொத்தம் கத்தி தீர்த்த 

பேச்சற்ற தொண்டை நோக 

வேண்டாத தெய்வமில்லை 

நினைக்காத நினைப்பு இல்லை  ! 


காத்து மட்டும் வந்து போக 

கழுத்தளவு எழுந்து நானும் 

முக்கி தானும் வெளித் தள்ள 

முழு உடலாய் நீ வந்தாய்  ! 


தொப்புள்  கொடியோடும் 

காத்துவந்த சதையோடும்

என்னை பிளந்தபடி  

கண்மணியே நீ பிறந்தாய்  ! 


தொப்புள் கொடி வெட்டி 

பின் முதுகில் தட்டு தட்டி 

உன் சத்தம்  எழுகையிலே 

என் சத்தம் குறைந்ததுவே ! 


கழுவி உனைத்துடைத்து 

மார்போடு போட்டதுல

கதகதப்பு  கூடிநிற்க 

கண்மணியே நீ கிடந்தாய்  ! 


உள்ளே கிடந்த உன்னை 

வெளியே பார்த்ததுல 

மகிழ்ச்சி குறையவில்லை  

மனசு வலியை நினைக்கவில்லை  ! 



கருவுக்குள் இருந்த உன்னை 

கண்ணாலே காணும் காட்சி 

வடிவம் கொண்டு வந்த கண்ணே  

என்னுயிரே என்ன சொல்ல.! 


பத்து மாசம் காத்திருந்து 

பார்த்த முகம் கண்மணியே 

பொத்தி பொத்தி உனை வளர்க்க 

பொழப்பு மொத்தம் கண்மணியே.!!! 


உன்னுயிரை நான் சுமந்து 

என்னுயிராய் உனை ஈன்று 

கண்ணுக்குள்ளே காத்திடுவேன் 

கண்மணியே கண்ணுறங்கு.  .!!! 

                           

                      






காதல் பொழியும் உனக்காக



காத்திருப்பும் சுகம் தான்


பசுமையாக்கும் அடைமழை போல 

 

காதல் பொழியும் உனக்காகவும் .





மழையே மழையே 


மழையே அடை மழையே

 நீ வானம் விட்டு 

மண்ணில் விழுகின்றாய் 


காற்றில் குளிர் காற்றில் 

நீ மிதந்து மிதந்து 

பூமியைச் சேர்கின்றாய் .  . 


இடிமின்னல் சத்தம் கடந்தும்  

உடையாமல்  வருகின்றாய் .


திசைமாறும் காற்றில் நீயும் 

சிதறாமல் விழுகின்றாய். 


மழையே அடை மழையே

நீ வானம் விட்டு 

மண்ணில் விழுகின்றாய் 


காற்றில் குளிர் காற்றில் 

நீ மிதந்து மிதந்து 

பூமியைச் சேர்கின்றாய் .  . 


பாலை நிலம் 

கண்டால் கூட

சிரிப்போடு விழுகின்றாய் 


பசுமை வயல்

பரிசாய் தந்து 

மண்ணோடு குழைகின்றாய்

 



மலை மேலே 

விழுந்தும்  கூட 

மண்ணோடே சேர்கின்றாய் 


மண்ணெல்லாம் 

பொன்னாய் மாற்றி 

வளம் சேர்த்தே போகின்றாய் 


துள்ளி வரும் 

ஆறாய் நீயும் 

கடலோடு சேர்கின்றாய் 


கடல் மேலே தூறிடும் போதும்

கடலோடே  கலக்கின்றாய் . ..









திசை மாறிய ஓடம் 



காற்றின் திசையில் ஓடம் 


கரை சேர்ந்தது 


கை நழுவிய துடுப்பு…..



























முந்திக்கொள்ளும் பேரழகா.  


அந்தி சாயும் வேளையிலே 

முந்திக் கொள்ளும் பேரழகா 


அன்பைப் பொழியும் எனதழகா 

வேலைகள் உண்டு ஏராளம் 


உணவை சமைக்கும் முன்பாக 

தின்னத் துடிப்பது முறைதானோ ?       

 

உனக்கும் உண்டு கலங்காதே 

உறக்கம் தொடும் முன் விழிக்காதே


பதைக்கும் கைகள் ஓயட்டும் 

பாதை மாற்றி போவாயே 


வதைக்கும் உனது அன்புக்கே 

வாழ்வைத் தந்தேன் காப்பாயே 


இருக்கும் பணிகள் நான் முடிக்க 

இருக்கும் நேரம் வெகு சிலவே 


இருக்கம் கொண்டு நீ அணைக்க 

இருக்கும் காலம் மிகப் பலவே 


இயல்பாய் கொஞ்சம் ஓய்ந்திடுவாய் 

இதழ்கள் சிதைக்கும் பணி விடுத்து 


இன்னும் இன்னும் சில நிமிடம் 

இதுவே கடைசி பணியாகும் 



இரவின் தொடக்கம் வருமுன்னே 

இங்கே வந்ததின் நோக்கத்தை 


இரக்கம் இன்றி நீ நிகழ்த்த 

இறங்கும் பெண்மையும் நான் தானே


இனிமை கொண்டே அரங்கேறும் 

இரவின் ஆட்டம் அத்தனையும் 


இனிதே தொடங்கும் நேரம் வா 

இறுதி வரையில் முயல்வோம் வா. !  


கட்டில் மொத்தம்  களமாக 

கட்டுடல்  இரண்டும்  வளமாக 


வாஞ்சை கொண்டு நீ தாக்க 

வஞ்சி உண்டு உனைத்தாங்க 


மிஞ்சும் வேகம் உடல்பரப்பு 

மிகைபடும் காதல் உளம் நிரப்பு


கொஞ்சும் மொழிகள் வேண்டாமே 

குவியும் முத்தம் போதாதே 


கெஞ்சும் படியாய் நீ ஆடு 

கிறங்க வேண்டும் உயிர்க்கூடு 


மஞ்சம் வந்த பின்னாலே 

பஞ்சம் வேண்டாம் அள்ளிக்கொடு


வஞ்சம் கொள்ளா அன்பாலே 

வாலை என்னை பின்னிடுவாய் 





நெஞ்சம் மொத்தம் நீயாக 

நித்தம் நித்தம் பண்ணிடுவாய் 


கஞ்சன் போல ஓய்வேடுத்து 

வள்ளல் போலே உழைத்திடுவாய் 


பசுமை கொண்ட நிலமாக 

பயிர்கள் செழிக்க வளமாக 


விதையை ஆழ நீ தூவு 

விருட்சம் காண்போம் விரைவாக.  . 


மதயானையின் ஓய்வாக 

மடியில் சாய்வாய் முடிவாக.  . 


கோழி கூவிய சத்தத்தில் 

குறட்டை இன்றி உறங்கிடுவோம்.  

 





கவிராஜன் நான் 


புவி மீதொரு கவிராஜனாய் 

நான் பூமியில் வாழ்வேன் 

புலன்யாவையும் சுயம் கொண்டுதான் 

இயங்கும் படி வாழ்வேன் 

மொழியால் ஒரு பழி நேர்ந்திட 

இயலா வழி வாழ்வேன் 

மொழியும் கவி உலகம் உள்ள 

காலம் தொட வாழ்வேன் 

சிந்தை புது விந்தை என 

புதுக் கோணத்தில் ஒளிர 

தந்தை என தாயும் என 

நான் தமிழ்மொழி  வளர்ப்பேன் 

முந்தை மொழி முன்னோர் வழி 

முறைதவறாமல் மொழிவேன் …



 உயிர் போகும் முன்னே


நெற்றியில் பொட்டு வைத்து 

கன்னத்தை சுழிப்பவளே !! 

விட்டு வைக்க வழியின்றி

வீழ்த்தும் விழி கொண்டவளே!! 

உதட்டோர மச்சத்தால் 

மிச்சத்தை முடித்துவிட்டாய் !! 

உனக்கென்ன புறப்படு -என்  

உயிர் போகும் முன்னே.  .!! 




இறைவா. .!  இறைவா . .! 


இறைவா. .!  இறைவா . .! 

வரம் வேண்டும் . .! 

அதை பலிக்கும் படியாய் 

தர வேண்டும் . .! 


இறைவா. .!  இறைவா . .! 

வரம் வேண்டும் .! 

உடனே நீயும் 

எதிரில் வா.  .! 


உணவுகள் படைத்திட 

வேண்டாம் நீ .  .. .!

உறுதியாய் ஒன்றைச் 

செய்து போ . .! 


தாகம் தீர்க்கும் 

தண்ணீரே.  .! 

பசியும் ஆற்றிட சபித்து போ.  

சாபம் ஒன்றை சபித்து போ.  . . .!






உனது கண்கள் 


மௌனப் 

புன்னகையிலேயே 

சரிந்துவிட்டவனை 

இன்னும் 

என்ன செய்ய 

காத்திருக்கிறது 

உனது கண்கள் . . 








தாயே 


புன்னகை சிந்திடும் 

பூவினைக்  கண்டனன் . . 


பூவையே  தேவி நீயே


மென்னடை வந்திடும் 

அன்னத்தை கண்டனன்


அன்னமே அன்னை உருவே


சன்னதி சென்றிடா

அருள்மழை பெற்றனன்


தெய்வமே தாயே நீயே …



தவளையின் காதல்


குளத்தில் ஒருமுறை 

குளிக்க வந்தாய்

இதயத்தில் நீயும் 

குதித்து விட்டாய் ….


ஏனடி என்னை 

அலையவிட்டாய் 

இதயத்தை சுமந்தே 

தவிக்கவிட்டாய்!


என் காதல் சொட்டும் இதயத்தை 

தருவேன் நீயும் . . ஏற்பாயா.  .??



இடமும் இயல்பும் 



காட்டின் பொந்திடை வைத்தது 

காட்டை எரித்தது .!


அடுப்பின் ஓட்டிடை 

வைத்தது 

உணவை சமைத்தது !


விளக்கின் மூக்கிடை வைத்தது 

ஒளியை உமிழ்ந்தது !


மலையின் முகடினில் 

வைத்தது

அருளைப் பொழிந்தது 


யாவும் 

கனல் தான்.  . 

இடமும் இயல்பும் ஒன்றல்ல.!!    



மகளே வா.! 



புலன்கள் யாவும் புதுமை பூண்டதே

உடலில் புதுவித வலிமை பிறந்ததே !

உன்னை உன்னை கண்ட நொடியிலே 

எந்தன் உயிரிலே கிளை துளிர்க்குதே !



காற்றில் ஏறி பறக்க முடியுதே

கடலில் நடந்தே ஓட முடியுதே !

பாட்டில் இசையில் உன்னை நானுமே

பாடிப் பாடியே ரசிப்பேன் நித்தமே !



சுவாசம் வாசம் கொண்டு சுவைக்குதே 

உன்னை நானும் நுகரும் பொழுதிலே !

கைகள் இரண்டும் நடுங்கி பிழைக்குதே 

உன்னை  நானும் ஏந்தும் பொழுதிலே !


ஆவல் மொத்தமும் உருவம் கொண்டதாய் 

அழகின் வடிவிலே நீயும் இருக்கிறாய் !

அன்பை மொத்தமும் வாரிப் பொழிகிறாய் 

குவியும் உனதிதழ் நகைப்பில் நனைக்கிறாய் !


பனியில் நனைந்திடும் பூவின் மென்மையாய் 

பார்க்கும் போதிலே  போதை தருகிறாய் !

படரும் உன் விரல் தீண்டல் ஒன்றிலே 

பனியைப் போலவே உறைய வைக்கிறாய் !


கரைந்து உருகிடும் எந்தன் அன்பினை 

விரைந்து ஓடிவா களித்து மகிழவே !

தந்தை அன்பினை நானும் உணர்ந்திட 

வாய்ப்பு தந்தெனை சிலிர்க்கச் செய்கிறாய். ! 





புத்தகம் 


அறிவால் சிறந்து 

அகிலம் ஆள 

ஆர்வம் கொண்டவன்  

ஒருவன் 

வருவான் வருவான் ..

அமைதியாய் காத்திருக்கும்

 புத்தகம் …









துணிந்து எழு 



சோர்ந்து போன 

உந்தன் கால்கள் 

சேரும் பாதை தூரமே !!


வெற்றி உன்னைச் 

சேரும் போது 

உலகம்  போற்றி வாழ்த்துமே  !! 


நெஞ்சில் கொண்ட 

துணிவு மொத்தம் 

உடலில் பரப்பி எழுந்திரு !! 








கொரோனா நோய்


கடவுள் போடும் கணக்கு 

காற்றில் வருதே பிணக்கு !!

கவனம் வேண்டும் நமக்கு 

தனித்தல் நன்றே உயிர்க்கு !!


 கண்ணில் தெரியா வைரஸ் 

பரவும் வேகமோ எக்ஸ்பிரஸ் .!! 

இருந்தும் என்ன பயமா? 

இருக்குது மருத்துவம் பலமா !!


நோயை நாமும் மிரட்டி 

அனைவரும் அடிப்போம் விரட்டி !! 

அறிகுறி இல்லா நோயை 

அறிவின் துணையுடன் அழிப்போம் !! 


அன்பால் இணையும் உறவு

இதுவே வாழ்வின் நிறைவு !!

இடத்தால்  விலகியே இருந்து 

மகிழ்வோம் இதுவே மருந்து !!


சுற்றம் யாவும் சுகமாய் 

வாழ்தல் வேண்டும் மகிழ்ந்து !! (-என்ற)

எண்ணம் நெஞ்சில் தழைக்க 

வைத்தது வைரஸ் செழிக்க !!


பணத்தின் பின்னே ஓடும் 

பயனிலா வாழ்வை நாடும் !!

வேகம் மாறிப் போச்சி 

அன்பே பிரதானம் ஆச்சி !!




அறிவைத் தேடும் வாய்ப்பை 

அளித்தது ஊரடங்கு  அகப்பை !!

தேடித் தேடி படிக்க 

தேவைகள் கண்டு களிக்க !!


வீட்டில் இருந்தால் கோடி 

நன்மைகள் வருமே நாடி !!

தனித்தே நாமும் இருப்போம் 

துணிவுடன் நோயை எதிர்ப்போம் !!


வந்திடும் நோயை விரட்டி 

வாழ்ந்திடும் தமிழினம் மிரட்டி !! 

சித்த மருத்துவம் சொல்லும் 

வித்தைகள் நோயை வெல்லும் !! 


பொதிகை சித்தர் சொன்ன 

மருந்துகள் உண்டால் விருந்தே !! 

எந்த நோயும் ஓடும் 

உடலை  பிணியைத்  துறந்தே !! 


முன்னோர் முறைகள் கொண்டே 

முறைப்படி நாமும் வாழ்ந்தால் !! 

அச்சம் இல்லை !அச்சம் இல்லை !

 அச்சமென்பதும் இல்லையே !! 









ஒளி வீசும் தேவதையே 


கடல் ஓரம் நீ இருந்தால் 

அலை கூட ஓடி வரும் 

திசை மறந்த படகெல்லாம் 

கை நீட்டி தேடி வரும் 

அடையாளம் தெரியாத 

உயிர் கூட நாடி வரும் 

மலையளவு சோகம் கூட 

மணலோடு கரைந்துவிடும் 

இரவு நேர தாரகையே!! 

ஒளி வீசும் தேவதையே !!! 






வான ஊர்வலம் 


அதிகாலை நேரத்தில் 

அடிவானம் சிவந்திடவே 


அழகான இசையோடு 

சிட்டுகளும் சினுங்குதங்கே 


மெட்டுக்குள் பாட்டு போல 

கட்டுக் கரும்பு போல 


இசையோடு இனிப்பு வந்து 

திகட்டாமல் கொடுக்குது காண் 


குயில் ஒன்று துணை தேடி 

தூரத்து இணை காண 


பாட்டொன்று படித்ததுவே 

பைந்தமிழை மிஞ்சிடவே . .


நாட்டுக்குள் பொருள் அறிய 

இன்று வரை யாருமில்லை 


எதிர்பாட்டு பாடும் குயில் 

அதுமட்டும் பொருள் அறியும் 


எந்த திசை ஓடுவது  

குழப்பத்தில் பரிதி எழ 


முத்து முத்து சோளத்தை

கோழி கூட்டம் விழுங்கும்  போல 


வின்மீன்கள் அத்தனையும் 

போனயிடம் காணலையே 



சந்திரனும் சங்கதியை 

சொல்லாமல் ஓடிவிட 


மந்திரங்கள் இல்லாமல் 

வானமது வெறுமையாச்சி.  . 


தனிமையிலே கொடுமையிலே 

நட்ட நடு வெயிலினிலே 


பயணம் போகும் சூரியனை 

வழியனுப்ப யாருமில்லை 


இளைப்பாற நிழலுமில்லை 

பசியாற உணவுமில்லை . .







இதுவே சமயம்  


வானெனும் வீதியில்  

வந்திடும்  விந்தைகள் 

காணும் போதிலே 

மகிழ்ச்சியும் பொங்குதே…


 நிலவின் அருமை 

நிலைத்த பெருமை 

வெண்ணிறம் பொழியும் 

தன்னிளம் குளுமை…


விரவிக் கிடக்கும் 

விண்மீன் கூட்டம் 

சிதறிய முத்தாய் 

மின்னும்  மணிகள் …


நீலத் திரையோ 

நிறத்தை இழந்து 

கருமை சூழ்ந்த 

காட்சியும் என்னே!!


கனவுகள் கூட்டி

கடந்திடும் வானில் 

கருந்திரை போட்டு 

மறைத்தவர் யாரோ? 


கட்டிளம் காளையோ 

கன்னியின் வேலையோ.  .

விளங்க முடியா 

வியப்போ வியப்பு. .!



கலந்திடும் ஆசையால் 

கருந்திரை ஒன்றினை

கதிரவன் முகத்தில்

வீசிய தருணமே . .


இரவென ஆனது 

பகல் ஓடிப்போனது

இத்தனை மாற்றமும்

வானில் நிகழ்ந்தது..

 

இரவின் சிறப்பை 

இனிதாய் ரசிக்க 

இதுவே சமயம் 

இனிது கொள்வோம்  நாம்.  .








உன் நிழலில் வாழ்வேனே. ! 



சிறைப்பட்ட 

கிளியானேன் நானே

விடுவிக்க 

நீ வந்தால் தானே

நான் கொண்ட 

காதலும் இன்று

விலகியே நிற்கிறது கண்டு 

உனைச் சேரவே ஆசையும் கொண்டேன்

உயிர்மொத்தம் உனக்காக தந்தேன் 

என்னை மீட்டு சேர்வாயே அன்பே. . 

உன் நிழலில் வாழ்வேனே நானே.  










அன்பே வா 


காலம் நம்மை பிரித்தால் 

அன்பால் அதையும் வெல்வோம் 

மீண்டும் துளிர்விடும் மரமாய் 

காதல் கொண்டே வாழ்வோம் 


வா அன்பே . . 






மழை தூவும் வானம்  


மஞ்சள் வெயில் பாயும்

மாலை நேர வானம் 

இரை தேடிய பறவை

கூடு தேடியே ஓடும் .


காற்றில் வேகம் கூட

மேகம் விரைந்தே ஓட 

மின்னல்  ஆடும் நடனம்

இடியின் ஓசை நாதம் 


சட சட மழையும் தூர 

சகலமும் மகிழ்ந்தே ஆட

கொட்டும் மழையின் வேகம் 

வாழை இலையும் தெறிக்கும் 



செடிமரம் எல்லாம் குளிக்கும் 

இலைதழை முத்துகள் தரிக்கும் 

மண்ணும் மழையால் குழையும் 

புதுப்புது உயிர்கள் பிழைக்கும்


குடிலில் அடைந்த பசுவின்

மடியில்  கன்றும் முட்ட

படியில் நிறைந்தது பாலும் 

விரைந்தது விரைந்தது நாளும் 


சிறகு முளைத்த ஈசல்

பறந்தே வந்தது வானில் 

சிறகுகள் முறிந்தது மழையில் 

சுருண்டு விழுந்தது தரையில்



பிடித்தன பிடித்தன ஓடி 

பறவையும் கோழியும் நாடி

பறந்ததும் இறந்தது ஈசல்  

உலகே மரணத்தின் வாசல்


 ஓடி ஓடித் தின்று 

வயிறு நிறைந்த மகிழ்வில்

கோழிகள் ஓடியே வந்து

கூண்டில் குஞ்சுடன் அடைய 


மழையைத் தூவும் மரத்தின் 

கிளையில் ஆடிடும்  கூட்டில் 

தாவி அமர்ந்தன பறவை 

இணையுடன் கழித்திடும் இரவை


தாவி குதித்தது தவளை 

போனது போனது கவலை

சத்தம் போட்டது மகிழ்ந்து 

வானம் பார்த்தது நெகிழ்ந்து 


வாழ்ந்து காட்டும் துணிவை

நெஞ்சில் தினமும் சுமந்தால் 

காலம்  எதையும் மாற்றும்

வாழ்வை உச்சத்தில் ஏற்றும்  


பாடி மகிழ்ந்தது குயில்கள் 

நிலவின் வரவை கருதி

விண்மீன் தோழிகள் வந்து 

வேவு பார்த்தன நின்று


ஓடி விழுந்தது பரிதி 

கார்மழை மேகப் பொதியில்

கூடி மறைத்தன முகில்கள் 

நெருப்பும் அவிந்தது குளிரில்



வெளிச்சம் மொத்தமும் விழுங்கி

இரவின் ஆட்சி தொடங்க 

இருளுள் சுருண்டது உலகம்  

புதுவிடியல் காண்போம் நாளை. 


 











மரு


நுதல் ..

விழி ..

காதுமடல்..

வாய் ..

இதழ் ..

கழுத்து .. 

அட. . 

மொத்த அழகையும்

கொட்டித் தீர்த்த பின்பும் 

எச்சமாய் . .! 

மிச்சமாய். .! 

நாசியின் பக்கத்தில் 

பருத்த  மரு...










நிலவிடம் காதல் பேச


அழகு நிலவொன்று 

காருக்குள் 

ஒளிவீசும் முகம் பார்க்க 

வேண்டும் கண்கள் 

பல நூறு..


கோயிலுக்கு 

சென்று வரும் 

சாமி உண்டா..??

உண்டு ..உண்டு..

காருக்குள் வீதியுலா.  




அழகு அழகு

கோயில் சென்று 

திரும்புகையில் 

குமரி     

இளங்குமரி 

ஆனதனால்

கவனமாய் வீடு சேர்க.

நிலவிடம் காதல் பேச 

விண்மீன்கள் வரக்கூடும்..






கவலை மொத்தம் நீங்கும்



பாதை வேறு ஆன போது 

பயணம் எங்கு சேரும் 


பதைக்கும் உள்ளம் பதறி என்ன 

பஞ்சில் நெருப்பா தூங்கும் 


கிழக்கு மேற்கு திசைகள் வேறு 

கீதை சொன்ன படியே 


நாளை என்ற எண்ணம் விடுத்து

 நடையை நீயும் போடு 


காலை விடியல் கண்ணில் பட்டால் 

கவலை மொத்தம் நீங்கும் ..




கடவுள் செய்த அற்புதமே


புன்னகை ஒன்றை நீ வீசி 

பூக்களை மொத்தமாய் வீழ்த்துகிறாய் 


கண்ணைக் கவரும் பேரழகால் 

என் கர்வம் மொத்தமும் விழுங்குகிறாய் 


ஜென்மம் கோடி போதாது 

உன்னுடன் நானும் வாழ்ந்திடவே 



மயிலின்  தோகை போல் உந்தன்

 தோளில் கிடக்கும் கூந்தலுக்குள் 


வரையறை ஏதும் இல்லாமல் 

வாழ்ந்தே போக ஆசயடி 


சிவப்பு வண்ண ஆடைக்குள்  

சிலையாய் நீயும் இருக்கின்றாய் 


சிலையைக் காணும் ஆவலிலே 

சிலிர்த்து போகிறேன் நானடியே


கலையை செதுக்கிய சிற்பி எங்கே 

கைதொழும் ஆர்வத்தில் வினவுகின்றேன் 


கடவுள் செய்த அற்புதத்தில் 

முதன்மை என்பேன் நான் உன்னை. 





உன் மடியோடு சாய்வேனே


உயிர் மொத்தம் உனதாக்கி 

உடல் மட்டும் உலவவிட்டாய் 


உன் நினைவு இல்லாத 

நொடி எங்கு தங்கவிட்டாய் 


உனைத்தானே  எனதாக

நினைத்தேனே நிதம் நானே 


உள் வாங்கும் மூச்சுக்கும் 

உன் வாசம் பெயர்தானே 


பூவுக்குள்  தேன் போல 

உள்ளிருந்து இனிக்கின்றாய் 



உயிர் மொத்தம் உனதாக்கி 

உடல்யாவும் துளிர்க்கின்றாய்


 நினைக்காத நேரம் தான் 

நினைவில் துளி இல்லையடி 


உனை அணைக்காத இரவோடு 

என் உறக்கம் தொல்லையடி 


உன்னுடனே நான் இருந்து 

உயிர் மொத்தம் மகிழ்வேனே


சோர்ந்து விழும்  நிலை வந்தால் 

உன் மடியோடு சாய்வேனே. . . 




அனுமதிப்போம் மரணத்தை



தனதான கனியை 

தயங்காமல் தந்திடும் 

மரம் போல.


தடையேதும் சொல்லாமல்  

அள்ளிடும் கையுள் 

அகப்படும் ஆற்றுநீர் போல  


விரும்பும் நொடியே

நுரையீரல் நிறைக்கின்ற 

காற்றைப் போல.  . 


நமதான இந்த வாழ்வை 

தமதாக்கிக் கொள்ளவும்  

அனுமதிப்போம் . . 


மரணத்தை . .





அம்மா 


காசில்லை பணமில்லை என்றாலும் கூட 

கலங்காத நெஞ்சத்தை பெற்றவளும் நீயே.


 உறக்கமில்லை ஓய்வில்லை ஆனாலும் கூட 

உற்சாகம் குறையாது உன் பாசம் அன்பே.  


சோறு பொங்க அரிசியில்லை 

சோகம் தீர வழியுமில்லை 


காலம் மொத்தம் எதிர்த்தாயே நின்று 

காத்துவிட்டாய் எங்களையும் இன்று 


நாளை வரும் நாளை வரும் என்று 

நம்பிக்கை கொண்டு நீயும் நடந்தாயே


நாங்கள் வாழ நாங்கள் வளர தானே 

உயிர் கொடுத்து நீயும் சுமந்தாயே


 சாலை எங்கும் நீ நடக்க 

உன் இடையில் நான் கிடக்க 


கவலை ஏதும் காட்டாமல் போனாய் 

கால் வலிக்கச்சிரிக்கும் புள்ளிமானாய் 


 உலகத்தை வெற்றி கொள்ள 

உன் வார்த்தை போதுமம்மா 


உன் பார்வை அதுபோதும் 

நானும் ஜெயிப்பேன் சும்மா 


காசு பணம் இல்லை . . 

கவலை  ஏதுமில்ல


கள்ளமில்லா புன்னகைக்கு

விலை என்ன சொல்ல 


மின்னும் அந்த தங்கம் கூட 

உன்னில் தோற்றுப் போகும் 


குறையில்லா உனைக் கண்டு

 கறைநிலவும்  ஓடும் அம்மா . 






பயணம் போவோம் 

 

தேசம் தாண்டிப் போகும்  பறவை

கவலை ஏதும் கொள்வதில்லை 

 

தங்கிப்போகும் மரங்களுக்கு

 வாடகை எதுவும்  தருவதில்லை 

 

அனுபவப்பயணம் போக நினைத்தால்

திட்டம் எதுவும் தேவையில்லை 

 

பறவையைப்  போலே பறந்திடு மனிதா 

திசைகள் அதுவாய் வழி கொடுக்கும் ….





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here