வெள்ளி, 8 அக்டோபர், 2021

#தமிழ்ச்சுவை#சங்க_காலப்_பயணம் 23

 

#சங்க_காலப்_பயணம் 23

#சங்கப்புலவர்கள்


   ஊருக்குள் கூடுகட்டி வாழ்ந்து வந்த  ஆண் சிட்டுக் குருவி ஒன்று தன் இணை நிறைமாத கர்ப்பமாக இருக்கிறது என்று அறிகிறது. செய்தி அறிந்த அந்த தருணம் மகிழ்ச்சியில் பறப்பதையும் மறந்து குதித்து குதித்து துள்ளாட்டம் போடுகிறது (துள்ளுநடை சேவல்). தன் மனைவி முட்டையிடும் இடம் (ஈன் இல்) மென்மையானதாக உருவாக்க பொருட்கள் சேர்க்க பறந்து செல்கிறது. பூக்களால் மெத்தையாக்க முடிவு செய்து நன்றாக இனிக்கும் கரும்பின் வெண்மையான மணமற்ற பூவை பறித்து வருகிறது. பூவில் மணம் இருந்தால் பெண்சிட்டுக்கு மயக்கம் வந்துவிடுமோ என்று மணமற்ற கரும்புப் பூவை தேர்வு செய்ததாம் அந்த சிட்டு. கருப்புப் பூ மென்மையானதாக இருந்தாலும் அதை அப்படியே பறித்து வந்தால்கூட ஏதாவது குச்சி கூலம் இருந்து பெண் சிட்டுக்கு படுக்கை அழுந்துமோ என்று அந்தப் பூவை தன் அலகால் கோதி கோதி (கொழுதும்) பஞ்சாக்கி ஒவ்வொன்றாக எடுத்துவந்து கூட்டில் சேர்க்கிறதாம்......


    எதுக்கு இந்த கதைனா....


தலைவியின் தோழிக்கும் தலைவனின் நண்பன் பாணர் ஒருவருக்குமான உரையாடல் ஒன்று சங்கப்பாடலில்....


நம்ம தலைவியை பிரிந்து பரத்தையரிடம் சென்ற தலைவன் மீண்டும் வீடு திரும்பும் எண்ணத்துடன் பாணரை தலைவியின் தோழியிடம் தூது அனுப்புகிறார்.தூது வந்த பாணர் சும்மா இருக்காமல் நம்ம தலைவர் எல்லாரினும் இனிமையானவர், தலைவியின் மேல் பேரன்பு உடையவர் அப்படி இப்படினு அளந்து விட ஆரம்பிக்கிறார். இதை கேட்ட தோழி நம்ம ஊர் குருவி கூட கருவுற்றிருக்கிற பெண் குருவியை எப்படி கவனமா பாசமா பாத்துகுது, தலைவியை தனியே விட்டு மறந்து சென்ற உங்கள் தலைவனை பற்றி பெருமையா பேசாதே போய்விடு என்று கூறுகிறாள்.(தலைவி கருவுற்றிருக்கிறாள் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறாள்).


குறுந்தொகை 85,

பாடியவர் - வடம வண்ணக்கன் தாமோதரனார்,

மருதத் திணை - தோழி பாணரிடம் சொன்னது 


**********************************************

யாரினும் இனியன் பேரன் பினனே

உள்ளூர்க் குரீஇத் துள்ளு நடைச் சேவல்

சூன் முதிர் பேடைக் ஈன் இல் இழை இயர்

தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண் பூக் கொழுதும்

யாண ஊரன் பாணன் வாயே. 


**********************************************

யாரினும் இனியன் - எல்லாரினும் இனிமையை உடையான்;  

பெரு அன்பினன் - தலைவியின்பாற் பெரிய அன்பினை உடையான்(உண்மையில் அங்ஙனம் இலன்).  

உள் ஊர் குரீஇ - ஊரினுள் இருக்கும் குருவியின்

துள்ளு நடை சேவல் - துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது

சூல் முதிர் பேடைக்கு - கருப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு, 

ஈன் இல் - பிள்ளையை ஈன்று எடுக்க எற்ற இடம் (முட்டையிட ஏற்ற இடம்)

இழைஇயர் - அமைக்கும் பொருட்டு,  

தேம் பொதி கொண்ட - தேன் பொதிதலைக் கொண்ட,  

தீ கழை கரும்பின் - இனிய கோலை உடைய கரும்பினது,  

நாறா வெண் பூ - மணம் வீசாத வெள்ளிய பூவை,  

கொழுதும் - கோதியெடுக்கும்,  

யாணர் ஊரன் - புதுவருவாயை உடைய ஊருக்குத் தலைவன், 

பாணன் வாயே -பாணனது சொல்லின் அளவில்.


மீண்டும் ஒருமுறை அந்த கதையையும் பாடலையும் படித்துப் பாருங்கள் பாடலின் அழகு புரியும்.....


****  வடமவண்ணக்கன் தாமோதரன்  ****


குறுந்தொகையில் ஒன்றும் புறநானூற்றில் ஒன்றும் என்று இரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார்.


 பெயருடன் "வண்ணக்கன்" என்ற சொல் ஒட்டி வரும் புலவர்கள் சங்கப்புலவர்களில் பலர் உள்ளனர்.


"வண்ணக்கன்"  என்பது ஒரு தொழில்.

சங்க காலத்தில் விற்பனைக்கு வரும் பொன்னை உரைத்துப் பார்த்துத் தரம் காணும் "பொன்னில் தரவண்ணம் காணும் கலைஞர்கள்" வண்ணக்கன் என்று அழைக்கப்பட்டனர்.


இந்த புலவரும் "வடமம்" என்ற ஊரைச்சாரந்த "வண்ணக்கன்" தொழிலைச் செய்துவந்த "தாமோதரன்" என்று கொள்ளலாம்.


சங்கப் பயணம் தொடரும்.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...