வியாழன், 9 ஜூலை, 2020

கண்மணியே கண்ணுறங்கு!!!


என்கண்மணியே கண்ணுறங்கு !! 

கருவுக்குள் உருபெற்று 
கால்பதித்த நாள் முதலே 
காத்திருந்தேன் காத்திருந்தேன் 
கண்மணியே உனக்காக. .!

எனக்குள்ளேநீ துளிர்த்த 
நல்ல செய்தி சொன்ன ஆச்சி 
மணிக்கட்டு நரம்பமுக்கி
மகிழ்ச்சியோடு சொன்னாலே ..!  

அதுமுதலே  நான் உன்னை 
பொத்தி பொத்தி வளர்த்தேனே 
ஆகாரம் கூட உன்னை
நினைத்தே தான் தின்னேனே ..!

 சாப்பிட்ட உணவு எல்லாம்
 ஒவ்வாமல் ஓடி வர
வாந்தியும் தான்  வந்த போதும் 
சலைக்காமல் நான் தின்னேன் !

மாசக் கணக்கை எல்லாம் 
மனசோடு எண்ணி வந்தேன் 
கொண்ட ஆசை அத்தனையும்  
கோடியுண்டு  நெஞ்சுக்குள்ள. !

  
மசக்கையில பட்ட பாடு 
பின் வாசல் கதவறியும் 
மல்லாந்து  படுத்த பாடு 
கயித்து கட்டில் தானறியும் !


வாந்தியில வயிர் வலிச்சா
உனக்கு நோகும் என்பதால
அடக்கி அடக்கி தோற்றுப் போனேன் 
அடி வாசல் தாண்டுமுன்னே !


வயிற்றுக்குள்ள உன்னை வச்சி 
வலிக்காமல் நான் நடந்தேன் 
அதிர்வில்லா வேலை மட்டும் 
அளவோடு செய்து வந்தேன்!

நாத்து நடப் போகவில்லை  
களை புடுங்க  இறங்கவில்லை 
கருவளரும் பிள்ளை  உனக்கு 
வலி கொடுக்க மனசுமில்லை !

எட்டு மாசம் தாண்டியாச்சி 
வயிறு மொத்தம் சரிந்துபோச்சி
கொட்டும் மேள சத்தத்தோடு 
சாதி சனம் கூடியாச்சி !

கண்ணாடி வலவி போட்டு 
கலர்கலரா சோறும் போட்டு 
சந்தனத்தில் நலங்கு வச்சி 
சாதி சனம் வாழ்த்தியாச்சி  !


 அடிமேல அடிவச்சி  
ஆடிநானும் நடந்து வர 
ஆத்தா உன் புள்ளைக்கு 
நல்ல செய்தி சொல்லிடம்மா  !

பெரியவங்க சொன்ன படி 
கதை கதையா சொன்னதெல்லாம்  பின்னால உதவும்  என்று 
பிசகாம கேட்டு வைத்தாய் !

 பத்தாம் மாதம்  தொடங்கயிலே 
பத்திரமாய் நான் இருக்க 
குதித்து வர காத்திருக்கும் 
உன் நெனப்பில் பூத்திருக்க.!

உலகத்து சாமிக்கெல்லாம் 
வேண்டுதல்கள் கோடி ஆச்சி 
உனை பார்க்கும் ஆவல் கொண்டே
துடிக்குதிங்கே என் மூச்சி !

அடிவயிறு வலியெடுக்கும்
அடையாளம் தெரியலயே  
அப்படியும் இப்படியும் மக்கள் 
சொன்னகதை புரியலயே  ! 

 எப்படியும் பிள்ளை உன்னை 
நான் தானே பெறவேண்டும் 
துணிவு மொத்தம் கொண்டவளாய் 
காத்திருந்தேன் பெற்றெடுக்க.!

சொன்ன தேதி வந்தபோது 
சொர சொரனு மனசுக்குள்ள 
 பயம் ஒன்று பற்றிக்கொள்ள
பதறிப் போய்தான் நின்றேனே.! 

குழப்பிக் கொண்டே  கிடந்தேன் நான் 
காலை மாலை இரவு என 
எப்போது வலி வருமோ 
திக்கத்து போனேன் நான் ! 

மெதுமெதுவாய் பகல்  ஓட 
அந்தி சாயும்  மாலையில
வேலை எல்லாம் முடிஞ்ச பின்னே
சாஞ்சி கிடந்தேனே தூங்காம.! 


அப்பப்போ  வரும் போல 
அடி வயிற்றில் சிறுவலியும் 
அந்த நேரம் கூடிடுச்சி 
வலியும் ரொம்ப அதிகமாச்சி  ! 

பஸ் புடிக்க  நின்னேனே
ஆஸ்பத்திரி போக வேண்டி
தட்டுத் தடுமாறி போய் சேர்ந்தேன் 
அவசமாய் ஆஸ்பத்திரி.!

 அவசரமாய் புடவை மாத்தி  
அணியெல்லாம் கழற்றிவிட்டு 
நான் மட்டும் போனேனே 
உனை சுமந்த வயித்தோட.! 

உனக்கு முன்னால 
எத்தனையோ பேர்பிறக்க 
கருவுக்குள் துடித்திருக்க 
வெளியே வர காத்திருக்க.!

 நானும் அந்த ஆவலோடு 
நடையெங்கும் நடந்தேனே 
நர்சம்மா சொன்ன வாக்கு 
நடந்திடவே நான் விரும்பி! 

நடநடயா  நான் நடந்தே
குதிகாலும் நொந்துபோக
அடி வயிற்றில் நீ உதைத்த 
அதிவேக உதை ஒன்னு  ! 

தண்ணீர் குடம் உடைந்து  
தரையிரங்கி சொட்டயில 
ஓடி நான்  போய் சொன்னேன் 
ஊசிபோடும் நர்ஸ்கிட்ட . .! 

 விறு விறுனு கூட்டிப்போயி  
 படுக்கயில கிடத்திப்புட்டு 
வந்த வேலை முடிந்தது போல் 
வாய் பேசாம போச்சிதந்தம்மா  ! 

 சில்வர் தகட்டு மேல 
நெலியும் பனி கட்டி போல 
நடுங்கி நான் நெளிந்தேனே 
நள்ளிரவு கடந்தபோதும்   ! 

 வலி ஏதும் எடுக்காம 
வரும் பாடும் இல்லாம 
விழிபிதுங்கி காத்திருந்தேன் 
கண்மணியே உன் வரவை   ! 

உடல்பில் ஊரிவரும் 
உள்மூச்சி வலியொன்னு 
மேல்மூச்சும் கீழ்மூச்சும் 
இன்னும் குறையவில்லை   ! 

இயல்பாய் இழுத்த மூச்சை 
இருமடங்கா உந்தி தள்ள
இன்னு இன்னு வேகமுன்னு 
சொன்ன சொல்லு மாறலயே!!

உயிரை நான் பிடிச்சி 
உன்னை வெளியேற்ற 
நாடி நரம்புஎல்லாம் 
வலிமையத்து போனதுவே  ! 

நீ தான் செய்ய வேணும் 
பிள்ளைய பெக்க வேணும்
முக்குடியம்மா முக்குனு 
மூத்த நர்ஸ்சு சொல்லிப்போச்சி  ! 

இன்னும் இன்னும் போராடி 
மொத்த உயிர் நான் திரட்டி 
உன்னை வெளியேற்ற 
எடுத்த முயற்றி தோற்கவில்லை  ! 

கருவறையை தாண்டி நீயும் 
கவனமாக வெளியில் வர 
தலைவந்த செய்தி சொல்லி 
கத்தியால் கீறல் போட. ! 

சத்தம் மொத்தம் கத்தி தீர்த்த 
பேச்சற்ற தொண்டை நோக 
வேண்டாத தெய்வமில்லை 
நினைக்காத நினைப்பு இல்லை  ! 

காத்து மட்டும் வந்து போக 
கழுத்தளவு எழுந்து நானும் 
முக்கி தானும் வெளித் தள்ள 
முழு உடலாய் நீ வந்தாய்  ! 

தொப்புல் கொடியோடும் 
காத்துவந்த சதையோடும்
என்னை பிளந்தபடி  
கண்மணியே நீ பிறந்தாய்  ! 

தொப்புல் கொடிவேட்டி 
பின் முதுகில் தட்டு தட்டி 
உன் சத்தம்  எழுகையிலே 
என் சத்தம் குறைந்ததுவே ! 

கழுவி உனைத்துடைத்து 
மார்போடு போட்டதுல
கதகதப்பு  கூடிநிற்க 
கண்மணியே நீ கிடந்தாய்  ! 


உள்ளே கிடந்த உன்னை 
வெளியே பார்த்ததுல 
மகிழ்ச்சி குறையவில்லை  
மனசு வலியை நினைக்கவில்லை  ! 

கருவுக்குள் இருந்த உன்னை 
கண்ணாலே காணும் காட்சி 
வடிவம் கொண்டு வந்த கண்ணே  
என்னுயிரே என்ன சொல்ல.! 

பத்து மாசம் காத்திருந்து 
பார்த்த முகம் கண்மணியே 
பொத்தி பொத்தி உனை வளர்க்க 
பொழப்பு மொத்தம் கண்மணியே.!!! 

உன்னுயிரை நான் சுமந்து 
என்னுயிராய் உனை ஈன்று கண்ணுக்குள்ளே காத்திடுவேன் கண்மணியே கண்ணுறங்கு.  .!!! 
                          
                           மழலைக்கவி 
                               08-07-2020





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...