மத்திய அரசைப் பின்பற்றி 10.03.2020 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கி அரசாணை வெளியீடு!!!*_
*ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்க ஊதிய உயர்வினை இரத்து செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு! இனி உயர் கல்வித் தகுதிக்கு ஊதிய
உயர்வு கிடையாது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் தாங்கள் பெறும் கூடுதல் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவர்தம் பணிக்காலத்தில் இருமுறை ஊக்க ஊதிய உயர்வு என்னும் Incentive 09.03.2020 வரை வழங்கப்பட்டு வந்தது.
இவ்வாறு அனுமதிக்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு என்பது ஊழியர் பெறும் அடிப்படை ஊதியத்தில் 6% கூட்டி நிர்ணயிக்கப்படும். இதனால், ஊழியர்கள் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட தேதியிலிருந்து மாதந்தோறும் அக்கூடுதல் அடிப்படை ஊதியத்தின்படி ஊதியம் பெற்று வந்தனர்.
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் பணியையும் பணிக்கேற்ப அவர்கள் கூடுதல் கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்கிலேயே இது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், ஒன்றிய அரசில் இது போன்ற நடைமுறைகள் இல்லை. அங்கு உயர் கல்வித் தகுதி பெறும் ஊழியருக்கு ஒரே ஒருமுறை மட்டும் குறிப்பிட்ட தொகை Lump-sum தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஒன்றிய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கான ஊதியத்தோடே பல்வேறுவகையான படிகளை மாதந்தோறும் பெற்று வருகின்றனர். அப்படிகளில் கால்வாசி அளவு கூட மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் 10.03.2020-ல் அஇஅதிமுக ஆட்சிகாலத்தில் மாநில அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வை இரத்து செய்யலாம் / நிறுத்தி வைக்கலாம் என கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிடப்பட்டது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் சட்டமன்றத்தில், 'ஒன்றிய அரசின் வழிமுறைகளின்படி ஊக்கத் தொகை வழங்கப்படும்' என அறிவித்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்.
அதன்படி மேற்படி அஇஅதிமுக ஆட்சிகாலத்தில் இரத்து செய்யலாம் / நிறுத்தி வைக்கலாம் என கொள்கை முடிவு எடுக்கப்பட்டதில், தற்போதைய திமுக ஆட்சிகாலத்தில் முழுமையாக ஊக்க ஊதிய உயர்வு (Incentive) இரத்து செய்யப்பட்டு ஊக்கத் தொகை மட்டும் வழங்கிட மனிதவள மேலாண்மை (அவிIV) துறை அரசாணை (நிலை) எண்.120 நாள்.01.11.2021-ன் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 10.03.2020-ற்குப் பின்னர் உயர்கல்வி பயின்றால்,
Ph.D முடித்தால் ரூ.25,000/-
P.G முடித்தால் ரூ.20,000/-
U.G / Diploma முடித்தால் ரூ.10,000/-
என்று ஒருமுறை மட்டும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். பணிக்காலத்தில் மேற்படி இரு உயர் படிப்புகளுக்கு (இருமுறை) இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், பணியில் சேர்வதற்கு முன்னரே மேற்படி உயர்கல்விப் படிப்பை முடித்திருப்பின் அதற்கு ஊக்கத் தொகை இல்லை.
உயர்கல்வி முடித்த 6 மாதத்திற்குள் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும்.
பதவி உயர்வுக்கு உதவாத கல்விசார் & இலக்கிய பாடப்பிரிவுகளுக்கு ஊக்கத் தொகை இல்லை.
ஒரு பதவிக்கான அடிப்படை கல்வித் தகுதியைத் தளர்த்தி பணி அமர்த்தப்பட்டோருக்கு ஊக்கத் தொகை இல்லை என்பன உள்ளிட்ட 12 விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மேற்படி படிப்புகளை முடிக்கத் தேவையான பல்கலைக்கழகக் கட்டணத்தைவிட மிக மிகக் குறைவான தொகையே ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது என்பதால் இனி வரும் காலங்களில் ஊக்கத் தொகை நோக்கில் எந்தவொரு அரசு ஊழியரோ / ஆசிரியரோ உயர்கல்வி பயில விண்ணப்பிக்க மாட்டார்கள். இதனால், பல்கலைக்கழகங்களின் தொலைதூர வழிக் கல்விச் சேர்க்கை பெருமளவில் குறையக்கூடும்.
மேலும், பணியில் சேர்வதற்கு முன்பே உயர்கல்வி படித்தால் இல்லை என்பதாலும், பணியில் சேர்ந்தபின் படித்தால் கல்விக்கட்டணமே பன்மடங்கு உள்ளதாலும் இனி வரும் தலைமுறை அரசு ஊழியர்கள் உயர்கல்வி பயில்வது அரிதே.
எனவே, இந்நடைமுறை முற்றாக ஊக்கத் தொகை வழங்கப்படுவது தானாகவே குறைவதற்கும், பல்கலைக்கழக தொலைதூர இயக்ககங்களுக்கு மூடுவிழா நடத்துவதற்குமே வழிவகுக்கக் கூடும். மற்றொருபுறம் தமிழ்நாட்டின் உயர்கல்வி பெற்றோர் சதவீதத்தையும் அகில இந்திய அளவில் குறைக்கக் கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக