புதன், 3 நவம்பர், 2021

சூரியா படத்துக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் விமர்சனம்

 





இயக்குனர் த.செ.ஞானவேல், சூர்யா மற்றும் அத்தனை நடிகர்கள், தொழிநுட்பக் கலைஞர்களுக்கும் ஆளுயரப் பூமாலைகளைச் சூட்டிவிட்டு விமரிசனத்தைத் தொடர்கிறேன்.



சமூக அக்கறையுடன்,  ஒவ்வொரு காட்சியிலும்  மனதைக் கனக்கவைக்கும் திரைக்கதையுடன், நுட்பமான சட்டப் பிரச்சினைகளையும், துல்லியமான எதார்த்தமான கோர்ட் விசாரணைகளையும் ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.


ஒளிந்த/ஒளித்த ரகசியங்களை திறமையாகத் துப்பறிந்து, ஆணித்தரமாக வாதாடும் சூர்யா கம்பீரமாக நிற்கிறார். 


கேவலமான காவல் துறை அதிகாரிகளை வெளிச்சம் போடும்போது கூடவே நல்ல அதிகாரிகளையும் காட்டியிருப்பதன் மூலம் காவல்துறையின் கெளரவத்தைக் குலைக்காமல் சில அயோக்கியர்களை மட்டும் சரியாக நியாயத்துடன் அடையாளம் காட்டியிருப்பதால்தான் தமிழக முதல்வரே படத்தைப் பாராட்டி கடிதம் அனுப்பியிருக்கிறார்.


இருளர்கள் இனத்தின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் ஓங்கிக் குரல் கொடுக்கிறது படம்.


லாக்கப்பில் அடித்து உதைக்கும் காட்சிகள், போலீசின் சதிகள் கொஞ்சம் விசாரணை படத்தை நினைவூட்டினாலும்.. தனித்துவமும் தெரிவதுதான் இயக்குனரின் சாமர்த்தியம்.


பல இடங்களில் வசனங்கள் பொளேர் என்று அறைகின்றன.


"ஜனநாயகத்தைக் காப்பாத்தறதுக்காக கொஞ்சம் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கு!''


"இந்த வழக்குல நீதி மன்றத்துக்கிட்டேருந்து நான் எதிர்பார்க்கறது.. நீதி இல்லை..நம்பிக்கை!"


"தப்பு செய்றவனைக் காப்பாத்த அதிகாரம், பணம், ஜாதி எல்லாம் வந்து துணையா நிக்குது. பாதிக்கப்படவனுக்கு போலீசும் வக்கீலும்தானே நிக்கணும்.."


"என் பிள்ளைங்ககிட்ட நாம சாப்புடறது உங்க அப்பாவை அடிச்சேக் கொன்னவனுங்க குடுத்த காசுலதான்னு சொல்லச் சொல்றிங்களா?"


"எல்லா போலீசும் தப்பானவங்க இல்ல..எல்லா போலீசும் நல்லவங்க இல்லை!"


எந்தக் காட்சியிலும் செயற்கைத்தனம் இல்லாமல்.. ஒரு வாழ்க்கைக்குள் பயணித்துத் திரும்புகிறோம்.


வழக்கறிஞராகத் துவங்கி நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. சந்துரு அவர்கள் கையாண்ட உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட திரைக்கதையில் துளியும் டாக்குமென்ட்ரித்தனம் இல்லை.


படம் முடியும்போது காட்டப்படும் தகவல்களுக்குப் பிறகு திரு. கே சந்துரு அவர்களுக்கு ஒரு சல்யூட் அடித்தேயாக வேண்டும். 


பல விருதுகளை வாங்கிக் குவிக்கப் போகிற படம் என்று உத்தரவாதமாகச் சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here